கன்னியாகுமரி: விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், “குமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட வெள்ளாங்கோடு ஊராட்சியை, வெள்ளாங்கோடு, சிதறால் என இரு பகுதிகளாகப் பிரிக்க ஊரக வளர்ச்சித் துறை முடிவு செய்துள்ளது. இவ்வாறு பிரிக்கப்படும்போது தற்போது உள்ள வார்டுகளில் முதல் ஆறு வார்டுகள் வெள்ளாங்கோடு ஊராட்சியிலும் ஏழு முதல் 15 வரையிலான ஒன்பது வார்டுகள் சிதறால் ஊராட்சியிலும் வரும் வகையில் பிரிக்கப்பட உள்ளது.
ஆனால், வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், வெள்ளாங்கோடு ஊராட்சியில் 4,547 வாக்காளர்களும், சிதறால் ஊராட்சியில் 6,051 வாக்காளர்களும் உள்ளனர். இது சமச்சீரற்ற பிரிவினையாகும். வெள்ளாங்கோடு, சிதறால் ஊராட்சிகளில் சமச்சீரான வாக்காளர்களும், சமமான பொதுமக்கள் வசிக்கும் அளவுக்கு பகுதிகளைப் பிரிக்கவும் வேண்டும்.
இதற்காக பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். அவர்களின் எண்ண ஓட்டத்தின் அடிப்படையில் ஊராட்சியைப் பிரிக்க வேண்டும். எனவே புதிதாக உருவாக உள்ள சிதறால் ஊராட்சியிலும், வெள்ளாங்கோடு ஊராட்சியிலும் ஓரளவு சமமாக வாக்காளர் எண்ணிக்கை வரும் அளவில் பிரிக்க வேண்டும்.
இதற்காக, ஒன்று முதல் ஏழாவது வார்டு வரை வெள்ளாங்கோடு ஊராட்சியிலேயே தொடர்ந்து இருந்திடவும், சிதறால் ஊராட்சியை 8 முதல் 15 வார்டுகளை இணைத்து உருவாக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரியுள்ளார்.