கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனாவின் தாக்கம் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, சுகாதாரத் துறை அலுவலர்கள், மருத்துவக் கல்லூரி அலுவலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த விஜய பாஸ்கர், "நமது மண்ணின் மைந்தர்கள் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து சொந்த ஊர் வரும்போது, சிலருக்கு கரோனா தொற்று இருப்பதால் அதன் மூலம் சிலருக்குப் பரவுவதற்கு வாய்ப்புள்ளது.
இந்த வகையில்தான் தென் மாவட்டங்களில் கரோனாவின் தாக்கம் அதிகரித்துவருகிறது. இது தவிர்க்க முடியாத ஒன்று. இதற்காக தமிழ்நாட்டில் 385 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராம அளவிலான மருத்துவமனைகளில் கூட ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
கரோனா நோயாளிகளுக்குச் சத்தான உணவுகளை வழங்க போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு அவுட்சோர்சிங் மூலமாக உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவிலேயே சமூகப் பரவல் என்பது இல்லை என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது” என்று கூறினார்.
இதையும் படிங்க:பசியால் வாடும் மக்களுக்கு உதவும் லவ் பண்டல்!