திமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவா கன்னியாகுமரியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “காஷ்மீர் மாநில ஆளுநர் அழைப்பின் பேரில் ராகுல்காந்தி தலைமையில், காஷ்மீர் சென்ற எங்களைப் போராட்டம் நடத்தவும், அமைதியைச் சீர்குலைக்கச் சென்றதாக நினைத்துத் திருப்பி அனுப்பிவிட்டனர். உச்சநீதிமன்ற உத்தரவின்படி மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, காஷ்மீர் மாநிலம் சென்று திரும்பி உள்ளார். அவருக்கு அங்கு என்ன அனுபவம் கிடைத்தது என்றும் அங்குள்ள மக்களின் நிலைமை என்ன என்பது குறித்தும் அவர் சொன்னால் தான் நமக்குத் தெரியவரும்.
ஏற்கனவே உலக அளவில் இந்தியா உணவு உற்பத்தியில் பின்தங்கியுள்ளது. உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறாமல், எந்த நாடும் பொருளாதாரத்தில் முன்னேற முடியாது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% விவசாயத்தைச் சார்ந்தது. ஆனால், தற்போது அந்த துறை மிகவும் நலிவடைந்துள்ளது. விளைநிலங்கள் எல்லாம் கட்டடங்களாக மாறிவருகின்றன. நம்நாடு விவசாயத்தை நம்பியிருக்கும் நாடாகும்.
பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் விவசாயிகளின் நிலையை உயர்த்தி, அத்துறையை முன்னேற்றுவதற்கான நடவடிக்கையை பாஜக அரசு மேற்கொள்ள வேண்டும். திமுகவின் தலையாய கொள்கை மாநில சுயாட்சி ஆகும். நாட்டிலுள்ள எந்த மாநிலத்தின் உரிமை பறிக்கப்பட்டாலும், திமுக அதற்காக குரல் கொடுக்கும் பாரம்பரிய இயக்கம் திமுக.
உலக அளவில் தமிழ்நாடு தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலம் அல்ல. இதனால் இங்குத் தொழில் செய்யத் தொழிலதிபர்கள் அஞ்சுகிறார்கள். தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாட்டில், பல லட்சம் கோடிக்கு முதலீடுகள் வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அதன் தற்போதைய நிலை என்ன என்பது தெரியவில்லை. தற்போது முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தில் அவர் என்ன கொண்டு வருகிறார் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
நிதிநிலை அறிக்கையில் திருத்தப்பட்ட ஜிஎஸ்டி மூலம், மத்திய அரசுக்கு எதிர்பார்த்த 1.25 லட்ச கோடி ரூபாய் வருவாய் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தை வெளியிடாமல் பல்வேறு காரியங்களில் மக்களைத் திசை திருப்பும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்ற வகையில், மத்திய அரசுக்குப் பல கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
இதேபோன்று நாடு முழுவதும் பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையின் கட்டுப்பாட்டில் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களைத் தனியார் நிறுவனங்கள் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைகள் தனியார் மயமாக்கும் அரசின் முயற்சி நாட்டின் பாதுகாப்புக்கு உகந்தது அல்ல. பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் கைப்பேசி மின்னூக்கிகள் போன்ற பொருட்கள் மீதான ஆயத்தீர்வை உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து மக்களுக்குத் தெரியவில்லை” என்றார்.