கன்னியாகுமரி: கரோனா நோய் தொற்று காரணமாக சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வராமல் இருந்தனர். தற்போது கரோனா கட்டுபாடு தளர்வு காரணமாக கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது சுற்றுலா பயணிகள் ஓரளவு வந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் கடலின் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு மீண்டும் படகு சேவையை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கன்னியாகுமரி வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 10ஆம் தேதி கரோனா குறித்த ஆய்வுக்காக நாகர்கோவிலுக்கு வந்த தமிழ்நாடு முதலமைச்சர், கன்னியாகுமரியில் படகுசேவை தொடங்கப்படும் என்று அறிவித்தார். கார்த்திகை மாதம் தொடங்கி உள்ள நிலையில், ஐயப்ப பக்தர்கள் வருகை இருக்கும் என்று கன்னியாகுமரி அனைத்து வியாபாரிகள் எதிர்பார்த்தனர். முதலமைச்சர் அறிவித்து இன்றுடன் 10 நாட்கள் ஆன நிலையில் இன்னும் படகுசேவை தொடங்கப்படவில்லை. இதனால் படகுசேவையை உடனடியாக தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கன்னியாகுமரி அனைத்து வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து கன்னியாகுமரி தேவிகுமரி வியாபாரிகள் சங்கத்தினர் நிருபர்களிடம் கூறியதாவது, 'கன்னியாகுமரி என்றாலே பகவதி அம்மன் கோயிலும், திருவள்ளுவர், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்ல படகுசேவையும் தான் நினைவுக்கு வரும், அதனை, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தப்படி உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுலா பயணிகளை நம்பி தான், எங்களின் வாழ்வாதாரமே உள்ளது. படகுசேவையை தொடங்க அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர், அதற்கான அரசாணையை வெளியிட்டு படகுசேவை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
இதையும் படிங்க: திருமணமானதை மறைந்து ஏமாற்றிய கணவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் புகார்!