கன்னியாகுமரி: நாகர்கோவில் அடுத்து பறக்கையில் வசித்து வருபவர் சுந்தர். இவர், அப்பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரிடம் கடந்த 2007ஆம் ஆண்டு 5 லட்சம் ரூபாய் கொடுத்து, குத்தகைக்கு அவருடைய இடத்தில் கடை நடத்தி வந்தார். ராஜசேகரன் குத்தகை கொடுத்தவருக்கு தெரியாமலேயே தன் உறவினர்களிடம் கடையை விலைக்கு கொடுத்துவிட்டு வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டார்.
இடத்தை விலைக்கு வாங்கிய ராஜசேகரின் உறவினர், சுந்தரை கடையை காலி செய்ய வேண்டும் என்றும் இல்லையெனில் கடையும், உன்னையும் தீ வைத்து கொளுத்திவிடுவதாக சுந்தரை மிரட்டியுள்ளனர். குத்தகை காலம் முடிவதற்கு முன்னரே வந்து கடையை காலி செய்ய முடியாது என சுந்தர் மறுத்துள்ளார்.
இந்நிலையில் நள்ளிரவில் வந்த அந்த கும்பல், சுந்தரின் கடையை அடித்து உடைத்து கடையில் இருந்த காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் உள்ளிட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்களை அள்ளிச் சென்றுள்ளனர்.
இது குறித்து சுசீந்திரம் காவல் நிலையத்தில் சுந்தர் புகார் கொடுத்தும் காவல் துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனவுளைச்சலடைந்த சுந்தர், தன்னுடைய பணம் 15 லட்சம் ரூபாய் முடங்கியுள்ளதாகவும், தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும், இது குறித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திருமணத்திற்கு வந்தவருக்கு கிடைத்த லக்கி பிரைஸ்!