மதுரை: கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் தாலுகா, மணவாளக்குறிச்சி கிராமத்தில் 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட மணவாளக்குறிச்சி பெரியகுளம் உள்ளது. இந்த குளத்தின் தண்ணீரைப் பயன்படுத்தி சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது.
வயல்களில் நெல்லுக்கு பாய்ந்ததுபோக எஞ்சிய தண்ணீர் வெளியேறும் வடிகாலாக புன்னம்பறம்பு - தெங்குமூடு வாய்க்கால், மழைநீர் வடிகாலாகவும் உள்ளது.
இந்த வாய்க்காலின் பெரும்பகுதியில் சாலை அமைத்ததால், தண்ணீர் செல்லும் பரப்பு குறுகி சுருங்கிவிட்டது. இதனால் சிறுமழை பெய்தாலே வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் அழுகி விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியகுளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதுகாத்திட வேண்டும். புன்னம்பறம்பு - தெங்குமூடு வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றி, தூர்வாரிடவும் உத்தரவிட வேண்டும் என அந்தோணிமுத்து, மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் கடந்த 2019-ம் ஆண்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், மனுதாரரின் புகார் மனுவை பரிசீலித்து, ஆக்கிரமிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டால் அவற்றை அகற்ற 8 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர்.
இதையும் படிங்க: சிறை அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த கைதி மீது வழக்குபதிவு