கன்னியாகுமரி : நாகர்கோவிலில் உள்ள வைத்தியநாதபுரம் முத்தாரம்மன் கோயில் மற்றும் வடலிவிளை முத்தாரம்மன் கோயிலில் உள்ள உண்டியல்களின் பூட்டை உடைத்து நேற்று (டிச.22) அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பணத்தை திருடிச் சென்றுள்ளார். தொடர்ந்து இன்று (டிச.23) உண்டியல்கள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த கோயில் நிர்வாகத்தினர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதுதொடர்பான விசாரணையில், இரு கோயில்களிலும் 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது கார்த்திகை மாதம் என்பதால் தினந்தோறும் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்லும் நிலையில் அதிக அளவிலான பணம் காணிக்கையாக வரும் என்பதை அறிந்தே, இந்தக் கொள்ளை சம்பவம் நடைபெற்று இருக்கலாம் எனவும் காவலர்கள் சந்தேகிக்கின்றனர்.
இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றிய காவலர்கள், அந்நபருக்கு வலைவீசி வருகின்றனர்.
வைத்தியநாதபுரம் முத்தாரம்மன் கோயிலில் கடந்த மூன்று ஆண்டுகளில் இரு முறை கொள்ளை சம்பவம் நிகழ்ந்தும், இதுவரை கொள்ளையர்கள் கைது செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்குள் அஞ்சுகிராமம், குளச்சல், நாகர்கோவில் ஆகிய பகுதிகளுக்கு உள்பட்ட வீடுகள், கடைகள், கோயில்கள் என 15க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரூ.30 லட்சம் மதிப்பிலான சிகரெட்டுகள் திருட்டு: சிசிடிவி மூலம் விசாரணை!