கன்னியாகுமரி: மாவட்டத்தில் பிரசித்திபெற்ற ஆலயங்களுள் ஒன்றானது திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில். இந்த ஆலயம் இந்தியாவில் உள்ள 108 வைணவ திருத்தலங்களுள் 76 ஆக போற்றப்படுவதும் 13 மலைநாட்டு திருப்பதிகளில் இரண்டாவது ஆலயமானதாகவும் கருதப்படுகிறது. இந்த ஆலயத்தில் உள்ள மூலவர் சிலை 22 அடி நீளமும் 16,008 கிராமங்கள் உள்ளடக்கிய கடுக்கரை திருப்படிமமாக அமைக்கப்பட்டதாகும்.
இத்திருக்கோயிலில் சுமார் 418 ஆண்டுகளுக்கு முன் வேணாட்டு அரசர்கள் ஆண்ட காலகட்டத்தில் அப்போதைய அரசனான வீர ரவிவர்மா தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து கடந்த 17 ஆண்டுகளாக திருப்பணிகள் தொடங்கி நடைபெற்றுவந்த நிலையில் பணிகள் நிறைவடைந்தன.
கடந்த 29 ஆம் தேதி முதல் கும்பாபிஷேக விழா தொடங்கியது. அதை தொடர்த்து பல்வேறு பரிகார பூஜைகள் நடைபெற்றுவந்தன. அதேபோல் 7 ஆண்டுகளாக பாலாலய சன்னதியிலிருந்த சாமி விக்ரகங்கள் கருவறை அமைந்துள்ள ஒன்றைக்கல் மண்பத்திற்குள் கடந்த 30ஆம் தேதி எடுத்து செல்லப்பட்டது.
இதையடுத்து 418 ஆண்டுகளுக்கு பிறகு மகாகும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. முன்னதாக ஆலய தந்திரியான திருவனந்தபுரம் அத்தியர மடத்தை சேர்ந்த கோகுல் தம்பூதிரி தலைமையில் கும்பகலசங்கள் பூஜைகள் செய்து எடுத்துவரப்பட்டு காலை சரியாக 6.30க்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்த்து ஆலயவளாகத்திலுள்ள திருவம்பாடி கிருஷ்ணசுவாமி சன்னதி மற்றும் தர்மசாஸ்தா சன்னதியிலும் மன்னர்கள் போற்றிவணங்கிய மூலவரான குலசேகர பெருமாள் சன்னதியிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் தமிழ்நாடு அமைச்சர்கள் சேகர்பாபு, மனோதங்கராஜ் ,எம்.பி விஜய்வசந்த், அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர் ஞானசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஆலயத்தை சுற்றி சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் அதிகமாக பக்தர்கள் பங்கேற்றனர். திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பு பணியில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: மாநகராட்சியில் அதிகரிக்கும் கரோனா - பாதுகாப்பு வழிமுறைகள் வெளியீடு