உலகம் முழுவதும் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு கன்னியாகுமரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் தின சிறப்பு விழா நடைபெற்றது.
அதில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, விழாவைத் தொடங்கி வைத்தார். அப்போது குடும்பங்கள், அரசியலில் பெண்களின் பங்கு குறித்துப் பேசிய அவர், வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் மகளிருக்கென 60% ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுயஉதவிக் குழு பெண்கள் கலந்துகொண்டனர். அந்தப் பெண்களிடம் மகளிர் தின விழா குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பிய தளவாய் சுந்தரம் சரியான பதிலைச் சொன்ன பெண்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் பரிசுகளையும் வழங்கினார். பின்னர் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்துப் பெண்களும் ஒரே மாதிரியான சீருடையில் வந்திருந்தது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. நிறைவில் மகளிர்களுக்கு வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்ற நோக்கில் ஆளுக்கொரு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான சைக்கிள் போட்டி