குமரி மாவட்டம் தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியான களியக்காவிளையை அடுத்த படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் நேற்று (8/1/2020) இரவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் (55) பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, கேரளாவிலிருந்து குமரி மாவட்டத்திற்குள் வந்த ஸ்கார்பியோ காரை அவர் சோதனை செய்வதற்காக தடுத்து நிறுத்தினார். இதையடுத்து, காரிலிருந்து இறங்கிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கண் இமைக்கும் நேரத்தில் துப்பாக்கியால் வில்சன் மீது சரமாரியாக மூன்று முறை சுட்டார். பின்னர் அந்நபர் தான் வந்த காரிலேயே தப்பிச் சென்றுவிட்டார்.
துப்பாக்கிச் சூட்டில் வில்சனின் மார்பு, வயிறு, இடுப்பு ஆகிய பகுதிகளில் தோட்டாக்கள் பாய்ந்ததில் படுகாயமடைந்து சுருண்டு விழுந்த வில்சனை சக காவலர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட உயர் அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சம்பவ இடம் விரைந்து வந்த காவல் துறை உயர் அலுவலர்கள், காரில் ஒரு நபர் தான் வந்தாரா அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் வந்தனரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன.
கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவல் துறையினர் மூன்று மாவோயிஸ்டுகளை சுட்டுக்கொலை செய்தனர். இதனால் வில்சனை சுட்டுவிட்டு மாவோயிஸ்டுகள் யாரும் குமரி மாவட்டத்திற்குள் ஊடுருவியுள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ரசிகர்களுக்காக போலீஸ் செக் போஸ்ட் அருகே நடனமாடிய டைகர் ஷெராஃப்