கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வருபவர் ரேவதி. இவருக்கு கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், கரோனா தொற்று பாதிப்பு உறுதியானதையடுத்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 20ஆம் தேதி நான்கு வழிச்சாலை தொடர்பாக நடந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதியுடன் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட பல அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர். இதனால் அவர்களுக்கும் கரோனா தொற்று பரவியிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே, மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் மற்றும் அக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிற அரசு அலுவலர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்களில் கிருமிநாசினி தெளிக்கபட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.