கன்னியாகுமரி: குலசேகரம் அருகே மினி லாரியில் கடத்த முயன்ற 27 மூட்டையில் மறைத்து கடத்தி வந்த குட்கா, பான் மசாலா ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், இதுதொடர்பாக இருவரையும் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே காவஸ்தலம் பகுதியில் குலசேகரம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த இரு நபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அருகிலுள்ள மசூதியில் தொழுகைக்கு வந்ததாகக் கூறியுள்ளார்.
அவர்களின் நடத்தையில் சந்தேகம் கொண்ட காவல்துறையினர் இருவரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில், இவர்கள் குலசேகரம் அருகே கவலஸ்தலம் பகுதியைச் சேர்ந்த ரபீக் (40), ஜலீல் (42) என்பது தெரியவந்தது. இருவரும் அதே பகுதியிலுள்ள ஒரு குடோனில் மினி லாரியில் நூதன முறையில் சாக்கு மூட்டைகளில் வாழைத்தார், வெங்காயம் போன்ற காய்கறிகளின் அடி பகுதியில் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பதுக்கி கடத்தி சென்று குடோனில் இறக்கிவிட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா, பான் மசாலா அடங்கிய 27 மூட்டைகளையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய மினி லாரி, இரு சக்கர வாகனத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தில், "பிரஸ்" என்ற ஸ்டிக்கரை ஒட்டி வந்ததும், பிடிபட்டவர்களில் ரபீக் என்பவர் பத்திரிகையாளர் போர்வையில் போலியாக ஸ்டிக்கர் ஒட்டியதோடு, சமூக சேவகர் என்ற பெயரைச் சொல்லியும் அப்பகுதி பொது மக்களிடம் பல லட்சம் ரூபாய் வசூல் வேட்டையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, போதைப் பொருள் கடத்தல் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு இருவரையும் கைது செய்த குலசேகரம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரையில் 385 கிலோ குட்கா பறிமுதல் - 3 பேர் கைது