கரோனா காலத்தில் மத்திய அரசு தொகுப்பிலிருந்து ரேஷன் கடைகளில் இலவசமாக அரிசி வழங்கப்பட்டது. ஒவ்வொரு குடும்ப அட்டைகளுக்கு 50 கிலோ வரை கூடுதல் அரிசி கிடைத்தது. மூன்று மாதங்கள் வரை இந்த கூடுதல் அரிசி சப்ளை செய்யப்பட்டது. இவ்வாறு அரிசி வாங்கிய பலர் அதை வெளி மார்க்கெட்டில் குறைந்த விலைக்கு விற்பனை செய்தனர்.
அந்த வகையில் கடத்தல் கும்பல் ரேஷன் அரிசியை கிலோ ரூ.3க்கு வாங்கி, அதை கேரளாவுக்கு தாராளமாக கடத்தி வருகிறார்கள். குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி இரவு திங்கள் சந்தை அருகே உள்ள ஆழ்வார்கோயில் சந்திப்பில் கார் ஒன்றிலிருந்து சுமார் ஒரு டன் ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் கைப்பற்றினர். ஆனால், வாகன ஓட்டுநர் தப்பி ஓடி விட்டார். அப்போது அந்த காரிலிருந்து சுமார் 25க்கும் மேற்பட்ட மூடைகளில் ரேஷன் அரிசி இருந்தது. இதில் 16 மூடைகள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மூடைகள் ஆகும்.
ரேஷன் கடைகளில் இருந்து நேரடியாக கடத்தல் கும்பலுக்கு அரிசி மூடைகள் கிடைத்துள்ளன. இந்த அரிசி மூடைகள், பிடிபட்ட காரை நாகர்கோவிலில் உள்ள உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு கொண்டுச் சென்று விசாரணை நடத்தினர். இதில் போலி நம்பர் மூலம் காரில் ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது. குமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து தான் இந்த கடத்தல் கும்பலுக்கு அரிசி கிடைத்து இருக்க வேண்டும் என நம்பப்படுகிறது.
குமரி மாவட்டத்தில் உடையார்விளை, காப்புகாடு, ஆரல்வாய்மொழி உள்ளிட்ட இடங்களில் உள்ள நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் ரேஷன் கடைகளுக்கு அரிசி சப்ளை ஆகிறது. மேலும் மத்திய அரசுக்கு சொந்தமான குடோன் பள்ளிவிளையில் உள்ளது. இங்கிருந்து தான் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான நுகர்பொருள் வாணிப குடோன்களுக்கு அரிசி சப்ளை ஆகும். இவ்வாறு சப்ளை ஆகும் சமயங்களில் தான் அரிசி மூட்டைகள் கைமாற்றி விடுபட்டிருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி இந்த அரிசி மூட்டை எந்த குடோனில் இருந்து சப்ளை ஆனது என்பது தொடர்பாக விசாரணை நடத்த காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க...சொகுசு காரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்!