கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் சமீப காலமாகக் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு போலீசாரின் மந்த நிலை தான் காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது குறித்து உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியும், ரோந்து பணிகளைத் துரிதப்படுத்தக் கோரியும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் கட்டாத்துறை அடுத்த வெள்ளிகோடு பகுதியில், ஒருவர் கடைக்குள் புகுந்து திருடி விட்டு தப்ப முயன்றுள்ளார். அப்போது அவரை ஊர் மக்கள் துரத்தியுள்ளனர். அதில், திருடரின் காலில் அடிப்பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தப்பி ஓட வழி இன்றி ஊர் மக்களிடம் சிக்கிக்கொண்டார்.
இதையடுத்து திருடரை பிடித்த மக்கள், காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதற்கு இளைஞரை ஆட்டோ மூலம் காவல் நிலையத்திற்கு அழைத்து வருமாறு மக்களிடம் காவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள், தங்களால் அழைத்து வர முடியாது, போலீசார் தான் அழைத்து செல்ல வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், இளைஞர் திருடிய பணத்தை மீட்டு சம்பந்தப்பட்ட கடை உரிமையாளரிடம் கொடுத்தனர். பின்னர், திருட்டில் ஈடுபட்ட இளைஞரை, தங்களுக்கு தெரிந்த பையன் என்றும், முன்னதாக அவன் மீது உள்ள வழக்கில் இதையும் சேர்த்து விடலாம் எனவும், திருடிய இளைஞர் தங்களது ரெகுலர் கஸ்டமர் என கூறியு ஊர் மக்கள் கண் முன்னே, காவலர்கள் இளைஞரை விடுவித்துள்ளனர்.
தாங்கள் பிடித்துக்கொடுத்த திருடரை, தங்கள் கண் முன்னே காவல்துறையினர் விடுவித்தது, பொதுமக்கள் இடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குற்றவாளிகளிடம் போலீசார் காண்பிக்கும் கரிசனையான நட்பை துண்டித்தால் மட்டுமே கன்னியாகுமரி மாவட்டத்தில் திருட்டை குறைக்க முடியும் என ஊர் மக்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அரசு வாகனத்தை அசால்டாக திருடிய பிச்சைக்காரர் கைது