அரபிக்கடல் பகுதியில் கடல்சீற்றம், வானிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் லட்சத்தீவு, மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா அதன் வடக்குக் கடல் பகுதியில் மீன்பிடிக்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தமிழ்நாடு அரசு, படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்தமாறு அறிவுறுத்திவருகிறது.
இந்நிலையில், கடலோர மீனவ கிராமங்களில் கடல் அரிப்பைச் தடுக்க ஏற்பாடுகள் செய்ய வலியுறுத்தி கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் ஹெச். வசந்தகுமார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடலோரக் கிராமங்கள் கடல் அரிப்பால் பல வீடுகளை இழந்துள்ள நிலையில், தற்போது கடல் அலை காரணமாக மீனவர்கள் வாழ்வு நிலையானதாக இல்லாமல் தினம் தினம் செத்துப்பிழைக்கும் வகையில் உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.
பூத்துறை, தூத்தூர் கிராமங்களில் கடல் அலைகளின் சீற்றத்தால் பேரழிவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக எச்சரித்துள்ள அவர், இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்துள்ளதாகக் கூறியுள்ளார். அலுவலர்கள் கடற்கரைகளில் கற்களை போடுவதாக புகார் தெரிவித்த ஹெச். வசந்தகுமார், இயன்றவரை கடலோரப்பகுதி மக்களை காப்பாற்ற தொடர் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடற்கரை கிராமங்களின் பாதுகாப்பு, நலன்களைக் கருத்தில்கொண்டு இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக 72 கி.மீ. தூரத்திற்கு கடல் அலை தடுப்புச் சுவர் அமைக்க மூன்றாயிரம் கோடி நிதி தேவைப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இதனை மத்திய அரசு ஒதுக்கி கடற்கரை கிராம மக்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கடற்கரை கிராமங்களில் நிரந்தர தீர்வு ஏற்படுத்த நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவேன் என்றார்.
இடைத்தேர்தலில் நாங்குநேரியில் காங்கிரஸ் தோல்வியடையவில்லை என சொன்ன ஹெச். வசந்தகுமார், பணபலம், அதிகாரபலம், மிரட்டல் உள்ளிட்டவைகளால் அதிமுக வெற்றிபெற்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். வாக்களிக்கும் மக்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்கி ஜனநாயகத்தை தோற்கடித்துள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அடுத்த 24 மணி நேரத்தில் க்யார் புயலின் தீவிரம் அதிகரிக்கும்! - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்