சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் லீபுரம் என்னும் கடற்கரை கிராமம் உள்ளது. இந்தக் கிராமமானது கன்னியாகுமரி முக்கடல் பகுதிக்கும் வட்டக்கோட்டை பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.
வட்டக்கோட்டை பகுதியானது மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கடல் பகுதி ராணுவ கோட்டையாகச் செயல்பட்டுவந்தது. இந்தக் கடல் கோட்டையிலிருந்து கடல் வழியாக எதிரிகள் வருகிறார்களா? எனத் திருவிதாங்கூர் கடற்படை வீரர்கள் கண்காணித்துவந்தனர்.
அதேபோல இந்தக் கோட்டைக்கும், கன்னியாகுமரிக்கும் இடையில் உள்ள லீபுரம் பகுதியில் சிறிய அளவிலான துறைமுகம் செயல்பட்டுவந்தது. இதற்குச் சான்றாக இன்றும் அந்தப் பகுதியில் பழங்கால எச்சங்களைக் கையில் பிடித்தபடி காட்சி அளிக்கிறது சிறிய அளவிலான கலங்கரை விளக்கம்.
இந்த லீபுரம் கடல் பகுதியிலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக தோணியில் வாணிபம் நடந்துள்ளது. அதிலும் குறிப்பாக இங்கிருந்து இலங்கைக்கு கருப்பட்டி, புகையிலை போன்ற பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. பின்னர் மீண்டும் இலங்கையிலிருந்து இங்கு வரும் தோணிகளுக்கு கடற்கரையை அடையாளம் காட்டுவதற்காக லீபுரம் பகுதியில் மன்னர் காலத்தில் இந்தக் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 30 அடி உயரமுள்ள இந்தக் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் பெரிய அளவிலான எண்ணெயில் எரியும் விளக்கு ஏற்றப்படும். இந்த அடையாளத்தைக் கொண்டு வியாபாரத்திற்குத் சென்றவர்கள் மீண்டும் ஊர் வந்துசேர்வார்கள்.
லீபுரம் பகுதியில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த வியாபாரம் நடைபெற்றுவந்துள்ளது. அதுவரை இந்தக் கலங்கரை விளக்கமும் செயல்பாட்டில் இருந்துள்ளது. பின்னர் இதன் செயல்பாடு குறைந்துள்ளது.
எனினும் இப்பகுதியில் கடல் வாணிபம் நடந்ததற்குச் சாட்சியாக இந்தக் கலங்கரை விளக்கம் தற்போதும் நின்றுகொண்டிருக்கிறது. பழங்கால நினைவு பொருள்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 2010ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் இந்தக் கலங்கரை விளக்கத்தை மறுசீரமைத்துள்ளது. எனினும் ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தற்போது இதனை யாரும் கண்டுகொள்ளவில்லை.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த 80 வயதான முதியவர் மணி கூறுகையில், "திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக் காலத்தில் லீபுரத்திலிருந்து இலங்கைக்கு தோணியில் சென்று வியாபாரம் செய்து மீண்டும் வருவார்கள். அதற்காகத் திரும்பிவருபவர்களுக்கு கரையை அடையாளம் காண்பதற்கு எளிதாக இருக்கும் வகையில் இந்தக் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது.
மன்னராட்சி காலத்திற்குப் பிறகு இதனை யாரும் பராமரிக்கவில்லை. தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. சுற்றுலாத் தலத்திற்கு அருகில் இருப்பதால் இதைப் பராமரித்துவந்தால் பழைய கலாசாரத்தை மக்களுக்கு எடுத்துரைப்பதுடன் சுற்றுலாப் பயணிகளையும் கவர முடியும்.
எனவே இந்தப் பாரம்பரிய நினைவுச் சின்னமான கலங்கரை விளக்கத்தைச் சீரமைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பப்ஜி விளையாட்டை மறக்க முடியாமல் சிறுவன் தற்கொலை