கன்னியாகுமரி சின்னமுட்டம் துறைமுகத்தைத் தங்கு தளமாகக் கொண்டு சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள், திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் இருந்து சுமார் எட்டு நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
கூத்தங்குழியைச் சேர்ந்த நாட்டுப் படகு வைத்திருக்கும் மீனவர்களுக்கும், கன்னியாகுமரி சின்ன முட்டத்தைச் சேர்ந்த விசை படகு மீனவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கூத்தங்குழியைச் சேர்ந்த மீனவர் டிலைட்ராஜா(50), என்பவர் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளார். மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்களின் மீனவர்களிடையே பதற்றமான சூழ்நிலை நிலவியது.
இதனால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களைக் கண்டித்து திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்தனர். கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றால் பிரச்னை ஏற்படும் வாய்ப்புள்ளது என்பதால் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என கன்னியாகுமரி மாவட்ட மீன்வளத் துறை உத்தரவிட்டது.
இந்த தடையை அடுத்து சின்ன முட்டம் விசைப்படகு மீனவர்கள் கடந்த ஒரு வார காலமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டதை மீன்வளத் துறை விலக்கி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று விசைப்படகு மீனவர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதுதொடர்பாக இன்று கன்னியாகுமாரி மாவட்ட மீன்வளத் துறை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இக்கூட்டத்தில் மீன்வளத் துறை இணை இயக்குநர் லம்பாக்ஜெயக்குமார் பேசுகையில், மிக குறுகியக் கடல் பகுதியில் மீன்பிடித் தொழில் செய்யும் நீங்கள் அண்ணன், தம்பி போல உறவுக்காரர்களாக ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து தொழில் செய்ய வேண்டும். இதில் விசைப்படகு, நாட்டுப்படகு என வித்தியாசம் பார்க்கக் கூடாது என தெரிவித்தார். இதையடுத்து கடந்த சில நாட்களாக விசைப்படகுகளுக்கு மீன்பிடிக்க விதிக்கப்பட்டிருந்த தடை 9 விதிகளுக்கு உட்பட்டு விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டது.