கன்னியாகுமரி: குமரி மாவட்ட நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட யாருக்கு வாய்ப்பு என்பது குறித்து அதிரடி அலசல் ரிப்போர்ட்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வசந்தகுமார் 6, 27,235 வாக்குகள் பெற்று, பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை விட இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக வசந்தகுமார் எம்பி மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து அவரது மகன் விஜய் வசந்த், தந்தை விட்ட அரசியல் பணிகளை செய்ய போவதாக கூறி அரசியலில் குதித்தார்.
அதன்பிறகு குமரி மாவட்டத்தில் மக்களின் பிரச்னைகளுக்காக நடைபெற்ற பல்வேறு போராட்டங்களிலும் அவர் கலந்துகொண்டார். இந்நிலையில், அவருக்கு காங்கிரஸ் தலைமையிடம் தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியை வழங்கியது. இதன் பின்னர் விஜய் வசந்த் தீவிர கட்சிப் பணியில் ஈடுபட்டு வந்தார்.
சமீபத்தில், தேர்தல் ஆணையம் தமிழக சட்டப்பேரவை தேர்தலை அறிவித்தது. அதனுடன் சேர்த்து கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பங்கேற்க கடும் போட்டா போட்டி தற்போது நிலவி வருகிறது. ஏனெனில் காங்கிரஸ் திமுக கூட்டணி உறுதியாக உள்ளதால், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் 100% வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.
கடந்தமுறை கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ரூபி மனோகரன் போட்டியிட கடுமையாக மல்லுக்கட்டினார். ஆனால், காங்கிரஸ் கட்சி பாரம்பரியத்தில் இருந்து வந்த வசந்தகுமாருக்கு சீட் கிடைத்தது. இந்த முறையும் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட ரூபி மனோகரன் காங்கிரஸ் தலைமையிடம் சீட் கேட்டு போராடி வருகிறார்.
அதேபோல் குமரி மாவட்ட சிஎஸ்ஐ டயோசிசனில் பொறுப்பு வகித்து வரும் ராபர்ட் புரூஸும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சீட்டு கேட்டு கடைசி நிமிடம் வரை வேட்பாளர் பட்டியலில் நீடித்து வந்தார். அதனால் அவரும் இடைத்தேர்தலில் சீட்டு கேட்டு சிஎஸ்ஐ டயோசிசன் வழியாக காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து தனது அப்பாவின் இடத்தை தான் நிரப்புவதாகவும் , அப்பா இந்த தொகுதி மக்களுக்கு என்னென்ன செய்ய விரும்பினாரோ, அந்த நல்ல பணிகள் அனைத்தையும் தான் தொடர்ந்து செய்வேன் என்றும் தெரிவித்தார். இது மற்றவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் விஜய் வசந்த்-ஐ ஓரங்கட்ட ஒரு தரப்பினர் விஜய் வசந்துக்கு தொகுதி கொடுக்கக்கூடாது என காங்கிரஸ் தலைமைக்கு வெளிப்படையாகவே கடிதம் அனுப்பினர். இந்த சலசலப்பிற்கு முற்று புள்ளி வைக்கும் அளவில் காங்கிரஸ் தலைமை அவருக்கு சமீபத்தில் பொதுச் செயலாளர் பதவியை வழங்கியது.
நாளை மறுநாள் குமரி மாவட்டம் வருகை தரும் ராகுல் காந்தியின் முழு நிகழ்ச்சிகளையும் விஜய் வசந்தே ஏற்பாடு செய்து வருகிறார். மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து மதில் சுவர்களில் விளம்பரப்படுத்தி இருக்கிறார். மேலும் தேங்காய் பட்டணத்தில் மீனவர்களுடன் கடலுக்குள் செல்ல இருக்கும் ராகுல் காந்திக்கு அதிநவீன படகு ஒன்று தயார் செய்யப்பட்டு வருகிறது.
ஒன்றரை கோடி ரூபாய் செலவில் தயார் செய்யப்பட்டு வரும் இந்த படகின் முழு செலவையும் விஜய் வசந்த்-தான் செய்து வருகிறார். எனவே தற்போதைய நிலவரப்படி குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் அனைத்து செலவுகளையும் விஜய்வசந்த் செய்துவருதாலும், காங்கிரஸ் தலைமையிடம் ஒரு புது பொறுப்புகளையும் பதவிகளையும் அவருக்கு தொடர்ந்து வழங்கி வருவதாலும், அவருக்கே இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அதிகமாக இருக்கும் என குமரி மாவட்ட காங்கிரஸ் தொண்டர்கள் முடிவு செய்துள்ளனர்.