கன்னியாகுமரி: முக்கடல் சங்கமத்தில் கரையோரம் அமைந்துள்ள புனித ஸ்தலங்களில் ஒன்றான கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் அம்மன் வீதி உலா வருதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 9 ஆம் நாள் திருவிழாவான இன்று பல்லாக்கில் கொண்டு வரப்பட்டு தேரில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனை தொடர்ந்து தேர் திருவிழா நடைபெற்றது.
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் விழாவில் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார். மேலும் குமரி மாவட்ட மக்கள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த சுற்றுலா பயணிகள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் திருவிழாவை முன்னிட்டு சுற்றுலா படகுகள் இயக்கம் மூன்று மணி நேரம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இன்று மாலை அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நாளை பத்தாம் நாள் திருவிழா ஆறாட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: துப்பாக்கியால் சுட்டு ஓய்வுபெற்ற ராணுவ வீரர் தற்கொலை