கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி மதுபானக் கடைகளில் இருப்பில் இருந்த மதுபானங்கள் அனைத்தும் அரசு கிடங்கிலும், தனியார் திருமண மண்டபத்திலும் வைக்கப்பட்டன.
இந்த ஊரடங்கு உத்தரவு நாற்பது நாள்களுக்கு மேலாக இருந்து வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளன. இதன்படி, தமிழ்நாட்டில் கரோனா தடுப்புப் பகுதிகளைத் தவிர்த்து, மற்ற அனைத்துப் பகுதிகளிலும் மதுபானக் கடைகள் மே 7ஆம் தேதி முதல் திறக்கப்படும் அரசு அறிவித்திருந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள 56 மதுக்கடைகளில் உள்ள மதுபாட்டில்கள் வைக்கப்பட்டிருந்த இறச்சகுளம் தனியார் மண்டத்தில் இருந்து மீண்டும் ஆரல்வாய்மொழி, கொட்டாரம், கன்னியாகுமரி, சுசீந்திரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மதுக்கடைகளுக்கு வாகனங்களின் மூலமாகக் கொண்டு செல்லப்பட்டன. மதுக்கடைகளை திறப்பதால் கரோனா நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என மாவட்ட மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதனால் மதுக்கடைகளை மூட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதையும் படிங்க:கரோனா காலத்திலும் கலைக்கு ஓய்வில்லை... 2 ஆயிரம் ஓவியங்கள் தீட்டிய நெல்லை மாணவர்கள்
!