நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 370ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் கரோனா தொற்று மேலும் பரவாமல் இருக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அந்த வகையில், பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க நாடு முழுவதும் நேற்று சுய ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது. இந்த சுய ஊரடங்கு உத்தரவு இன்று காலை 9 மணி முதல் நாளை காலை 5 மணி வரை கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மருத்துவமனைகளில் தன்னலம் கருதாமல் பணிபுரிந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாட்டின் பல பகுதிகளில் உள்ள அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் கை தட்டி பாராட்டு தெரிவித்தனர்.
அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலக ஊழியர்கள், மாநகராட்சி ஆணையர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் உள்ளிட்ட பலர் கை தட்டி நன்றி தெரிவித்தனர்.
அதேபோல், தீயணைப்பு வாகனங்களில் சிவப்பு நிற சைரன் விளக்கை ஒளிர விட்டு தீயணைப்பு வீரர்கள் கையை தட்டி நன்றியை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள வடக்குப் பேட்டையில் வசிக்கும் பொதுமக்கள் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் மருத்துவர்களை ஆதரித்து கை தட்டி பாராட்டு தெரிவித்தனர்.
இதையும் படிங்க:கரோனா அச்சுறுத்தல்: தெலங்கானாவை முடக்க உத்தரவு