நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வட நேரே இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
"கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு, பறக்கும் படை நடத்திய சோதனையில் இதுவரை 2 கோடியே 16 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி மாவட்டம் முழுவதும் இருந்த 3 ஆயிரத்து 708 அரசியல் கொடிக்கம்பங்கள் அகற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் விதிகளை மீறியதாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆயிரத்து 694 வாக்குச்சாவடி மையங்களில் கடந்த தேர்தலில் வாக்குப்பதிவு குறைவான இடங்களை கண்டறிந்து 519 பகுதிகளை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் பொது மக்கள் கண்டிப்பாக வாக்களித்து தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார்.