சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள பாறையில் 1892ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி விவேகானந்தர் தியானம் செய்த இடத்தில் விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டப்பட்டது. ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளராக இருந்த ஏக்நாத் ரானடே ஏற்பாட்டில் கட்டப்பட்ட விவேகானந்தர் மண்டபம் 1970 செப்டம்பர் 2ஆம் தேதி திறக்கப்பட்டது.
இந்நிலையில், விவேகானந்தர் மண்டபத்தின் பொன்விழா செப்டம்பர் 2ஆம் தேதி தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க டிசம்பர் 25ஆம் தேதி இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை தரவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்காக அவர் டெல்லியிலிருந்து விமானம் மூலம் வரும் திருவனந்தபுரம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசினர் விருந்தினர் மாளிகைக்கு வரவுள்ளார்.
விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் பாதுகாப்பு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே, மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் மற்றும் அரசு அலுவலர்கள் அரசினர் விருந்தினர் மாளிகையை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் குடியரசுத்தலைவர் விவேகானந்தர் பாறைக்குச் செல்லவுள்ள எம்.எல்.விவேகானந்தா என்ற படகு, தற்போது பராமரிக்கப்பட்டு புதிய வண்ணம் அடிக்கப்பட்டு நவீனப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நெகிழிக்கு மாற்றாக பாக்கு மட்டைத் தயாரிப்பில் கலக்கும் பெண்மணி!