நாட்டிற்காக தங்களது உயிரை பணயம் வைக்கும் ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்கள், விடுமுறையில் சொந்த ஊருக்கு வருவது, உறவினருடன் பொழுதை கழிப்பது, குடும்பத்தினருடன் சுற்றுலா தலங்களுக்கு செல்வது தான் வாடிக்கை. ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள், பொதுமக்களுக்கு சேவை செய்வதையே பொழுதுபோக்காக வைத்து தாங்கள் 'ஜவான்கள்' என நிரூபித்துள்ளனர். இதற்காக ஐந்து மாதங்களுக்கு முன்பு ஒரு வாட்ஸ்-ஆப் குழுவை உருவாக்கி அதன் மூலம் கன்னியாகுமரி ஜவான்கள் என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி சேவை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை இவர்களின் சேவை பணி கணக்கெடுத்து கூற முடியாத அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது. கன்னியாகுமரியை சுற்றியுள்ள விவேகானந்தபுரம் பயணிகள் நிழற்குடை உள்ள போஸ்டர்களை கிழித்து சுத்தப்படுத்தி, புதிய வர்ணம் பூசி ஜொலிக்க வைத்தனர். இதன்பின்னர் அப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றி மரக்கன்றுகளை நட்டனர். மேலும், அங்கிருந்து காந்தி மண்டபம் வரை ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இந்த விழிப்புணர்வு பிரச்சார பைக் பேரணி கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
மேலும், அப்துல் கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு காந்தி மண்டபம் முன்பு அவரது படம் வைக்கப்பட்டு அதற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஜவான்களின் இந்த செயல்களை கண்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.