இந்தியாவின் தென் எல்லையான கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுயில் அதிமுக கூட்டணி சார்பாக பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜய் வசந்த் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2019 தேர்தலில் இரண்டரை லட்சத்துக்கும் மேலான வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றவர் வசந்தகுமார். கடந்த ஆண்டு இவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவரது மகனும், நடிகருமான விஜய் வசந்த் தந்தையின் அரசியல் பாதையில் தன் பயணத்தைத் தொடங்கினார். எதிர் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். அவை பின்வருமாறு:
உங்கள் தந்தையின் கனவுத்திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவதாகக் கூறியுள்ளீர்கள். என்னென்ன திட்டங்கள் அவை?
கன்னியாகுமரி மாவட்டத்தில் விமான நிலையம், ஹெலிகாப்டர் தளம் போன்றவற்றை அமைக்க வேண்டும். வாழை, தென்னை, ரப்பர் ஆகியவற்றிற்கு என ஆராய்ச்சி நிலையங்கள் உருவாக்க வேண்டும். முக்கியமாக, புற்றுநோய் ஆராய்ச்சி மையம் கொண்டு வரவேண்டும். காலத்திற்கு ஏற்றபடி, என் தந்தையின் திட்டங்களை ஒவ்வொன்றாகக் கொண்டுவர திட்டமிட்டுள்ளேன்.
கன்னியாகுமரி தொகுதியின் முக்கியப் பிரச்னை?
சீரான சாலைகள் இல்லாதது தான் முதன்மையான பிரச்னை. போதுமான வேலைவாய்ப்பு இல்லை. வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும்.
குமரி தொகுதியில் உங்களுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பார்கள். மே 2ஆம் தேதி எங்களின் வெற்றி உங்களுக்குத் தெரியவரும்.
வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு நீங்கள் செயல்படுத்தும் முதல் திட்டம் எதுவாக இருக்கும்?
- முதலில் சாலைகளை சீரமைப்பேன்
- என் தந்தை செய்ய நினைத்து, நிலுவையில் இருக்கும் திட்டங்களை நிறைவேற்றுவேன்.
- சுற்றுலாத்துறையை மேம்படுத்துவேன். சர்வதேச அளவில் சுற்றுலாத்தரத்தை உயர்த்த வேண்டும்.
- அவசரகாலங்களில் மீனவர்களை விரைந்து மீட்பதற்கு ஹெலிகாப்டர் தளம் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. அதைக் கொண்டு வருவேன்.
மக்கள் ஏன் உங்களுக்கு வாக்களிக்க வேண்டும்?
மத்திய அரசு மக்கள் விரோதத் திட்டங்களை தொடர்ந்து கொண்டு வருகிறது. அது மதச்சார்பற்று இருக்கவில்லை, மதத்தை மக்கள் மீது திணிக்கிறது. மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் செய்யப் பார்க்கிறது. பல நல்ல திட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என்று கனவுகளோடும் ஆசையோடும் என் தந்தை இருந்தார். அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள எனக்கு வாக்களியுங்கள். குமரி மக்களின் குரலாக நான் இருப்பேன் என்பதற்கு உறுதி அளிக்கிறேன்” எனப் பேசி முடித்தார் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்.
இதையும் படிங்க:பாசிச சக்திகள், திமுக சந்தர்பவாத அரசியலில் இருந்து தமிழ்நாட்டை காக்க வேண்டும் - ஓவைசி பேச்சு