தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் ஹரி (30). இவர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கஸ்தூரி (25) என்பவரை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் குமரி மாவட்டம் கோட்டார் பகுதியில் உள்ள பைத்துல்மால் நகர் பகுதியில் வசித்துவந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது.
குழந்தை பாக்கியம் வேண்டி பல கோயில்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் சென்றும் குழந்தை இல்லாததால் மிகவும் மன வேதனையில் காணப்பட்டனர். இந்நிலையில் நேற்று (டிச. 14) இரவு கணவன்-மனைவி இருவரும் வழக்கம்போல் தூங்கச் சென்றனர்.
ஆனால் காலை வெகுநேரமாகியும் வீட்டைவிட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தம்பதிகள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இருவரது உடல்கள் அருகில் விஷ பாட்டில் காணப்பட்டது.
இது குறித்து அக்கம்பக்கத்தினர் கோட்டாறு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடம் வந்த காவல் துறையினர் இருவரது உடலையும் மீட்டு உடற்கூராய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குழந்தை இல்லாததால் தற்கொலை செய்துகொள்வதைவிட, யாரும் இல்லாத குழந்தைகளுக்கு தாய்-தந்தையாக இருப்பதே உயர்ந்தது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: மௌனமான முறையில் தேர்தல் பரப்புரை செய்யும் கமல்ஹாசன்