கன்னியாகுமரி: பத்மநாபபுரம் கோட்டைப்பகுதியில் பழம்பெருமை வாய்ந்த நீலகண்ட சுவாமி கோயில் அமைந்துள்ளது. பன்னிரு சிவாலயங்களில் ஒன்றான இக்கோயிலில் கடந்த ஆட்சியின்போது குடமுழுக்கு நடத்துவதற்காக பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
குடமுழுக்கு நடத்த முன்வந்த அரசு:
ஆனால், தேர்தல் காரணமாக தொடர்ந்து பணிகள் நடைபெறாத நிலையில் குடமுழுக்கும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் இதுகுறித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததின் பயனாக தற்போது குடமுழுக்கு நடத்த தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது.
அதையொட்டி தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் நேற்று (ஜூலை 12) கோயிலை பார்வையிட்டதோடு அப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, 'பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று விரைவில் குடமுழுக்கு மேற்கொள்ளப்படும். அதன் முன்பாக ராஜகோபுரம், கற்பக மண்டபம், கொடிமரம் ஆகியவற்றை புனரமைக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது.
ஆன்மிக சுற்றுலாத் தலம்:
அதற்காக 1 கோடிய 85 லட்சம் ரூபாய் செலவிலான திட்டம் தயாரிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீட்டிற்கான அறிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 12 சிவாலயங்களையும் ஒருங்கிணைத்து சீரமைக்க முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்து சிறப்பு நிதி ஒதுக்கப்படும்.
குமரியை ஆன்மிக சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டி பக்தர்கள் வைக்கும் கோரிக்கைகளும் விரைவில் பரிசீலிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமாவாசை கூட்டம்: பண்ணாரி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கரோனா பரிசோதனை