பள்ளிகளில் முழு ஆண்டு தேர்வு முடிவடைந்ததையொட்டி கோடை விடுமுறை விடப்பட்டது. இதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாகவே கன்னியாகுமரியில் சுற்றுலா சீசன் களை கட்டியது. இதனால் தினமும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தந்து சென்றனர். இதனால் கன்னியாகுமரியில் வியாபாரிகளும், ஹோட்டல் முதலாளிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. இதனால் கன்னியாகுமரியில் சீசன் முடிந்து திடீரென சுற்றுலா பயணிகள் கூட்டம் இல்லாமல் கன்னியாகுமரி களையிழந்து காணப்பட்டது. பொதுவாக மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களான முக்கடல் சங்கமம், கடற்கரை பகுதிகள், கடற்கரை சாலை, காந்தி மண்டபம், பூம்புகார் படகு போக்குவரத்து போன்ற பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
இதனால் வியாபாரிகள் வியாபாரம் இல்லாமல் மிகவும் கவலை அடைந்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக நல்ல வியாபாரம் நடந்த சூழலில் திடீரென வியாபாரம் வீழ்ச்சி அடைந்தது மிகவும் கவலையளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தற்போது கன்னியாகுமரியில் வட மாநில சுற்றுலா பயணிகள் மட்டும் வந்தவண்ணம் உள்ளனர்.