கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்துள்ள மணிகட்டிபொட்டல் பகுதியிலுள்ள நிறைமாத கர்ப்பிணி வீட்டுக்கு இன்று (செப்.23) தொலைபேசியில் தொடர்புகொண்ட சுகாதார அலுவலர்கள், பெண்ணிற்கு கரோனா இருப்பதாகக் கூறிவிட்டு துணிமணிகளை எடுத்து தயாராக இருக்கும்படி கூறி வீட்டிற்கு வந்துள்ளனர்.
இதையடுத்து, தனக்கு கரோனா இல்லை என அரசு அங்கீகாரம் வழங்கிய தனியார் லேபில் நெகட்டிவ் அறிக்கையை அப்பெண் காண்பித்துள்ளார். ஆனால், அதனை ஏற்றுக்கொள்ளாத அலுவலர்கள், பெண்ணை மிரட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர்.
அப்போது, அங்கு திரண்ட ஊர் மக்கள், இது குறித்து சுகாதார அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வேறு வழியின்றி அவர்கள் திரும்பிச் சென்றனர்.
கரோனா தொற்று பரிசோதனை செய்யாதவர்கள், பரிசோதனையில் (நெகட்டிவ்) நோய்த்தொற்று இல்லை என முடிவுகள் வந்தவர்களையும் கூட தொற்று இருப்பதாக கூறி சுகாதாரத் துறையினர் தொடர்ந்து மிரட்டி அழைத்துச் செல்லும் சம்பவங்களால் மக்கள் அனைவரும் பீதியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு, தூக்கமின்மை- எச்சரிக்கை விடுக்கும் மனநல மருத்துவர்