உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்த கரோனா நோய்த்தொற்று, இந்தியாவிலும் பரவி ஆயிரக்கணக்கானோரின் உயிரைப் பறித்தது. இந்த நோயைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை தற்போதுவரை மேற்கொண்டு வருகின்றன.
குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை, கரோனா நோய்ப் பரவலைத் தடுக்க மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பொதுமக்கள் தேவை இன்றி வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. கரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். மருத்துவமனைகளில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் கரோனா நோய்ப் பரவிய, தொடக்க காலத்தில் மருத்துவமனைகளில் போதிய இடங்கள் இல்லாமலும், போதிய அளவு உயிர் காக்கும் கருவிகள் இல்லாமலும் இருந்தன. குறிப்பாக, நோய்ப் பாதிக்கப்பட்டு கடுமையான நிலையில் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு செயற்கை ஆக்சிஜன் கொடுப்பதற்காக வென்டிலேட்டர் குறைந்த அளவே இருந்தன.
மேலும், கரோனா நோய்ப் பரிசோதனைக் கருவி, ரேபிட் டெஸ்ட் கருவிகள் அப்போது அதிக அளவில் இருப்பில் இல்லை. இதனால், நோயாளிகளின் சளி மாதிரியை தனியார் பரிசோதனை நிலையங்களில் கொடுத்து பல ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து பரிசோதனை எடுக்கும் நிலை ஏற்பட்டு வந்தது. இதனால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மக்கள் பிரதிநிதிகள் தமிழ்நாடு அரசுக்கு வைத்த கோரிக்கையைத்தொடர்ந்து, குமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வென்டிலேட்டர்கள், உயர் அழுத்த ஆக்ஸிஜன் கருவி, அல்ட்ரா சவுண்ட் மிஷின், எக்ஸ்ரே கருவிகள், ரேபிட் டெஸ்ட் கருவிகள் போன்ற ஏராளமான கருவிகள் கிடைத்தன.
இதன்மூலம் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு வந்த கரோனா நோயாளிகளுக்கு எளிதாக மருத்துவம் பார்ப்பதற்கு மருத்துவர்களால் முடிந்தது. குறிப்பாக, வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் செலுத்தியும்; உயர் அழுத்த ஆக்ஸிஜன் கருவி மூலம் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செலுத்தியும் மூச்சுவிட முடியாமல் திணறியவர்களுக்கு உயிர் கொடுத்து காப்பாற்றினர், மருத்துவர்கள்.
குமரி மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று தற்போது படிப்படியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் அரசு மருத்துவமனையில் கரோனா தேவைக்காக பெறப்பட்ட கருவிகள் உள்ளன. கரோனா நோயின் தாக்கம் குறைந்தாலும் இந்தக் கருவிகளின் தேவை தொடர்ந்து இருந்து வருகிறது.
இதுகுறித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் அருள்பிரகாஷ் கூறியதாவது, 'குமரி மாவட்டத்தில் கரோனா பரவிய நேரத்தில் மருத்துவமனைகளில் சிகிச்சைக்குத் தேவையான போதிய கருவிகள் கிடையாது. இது குறித்து தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்தோம். இதன் பின்னர் 81 வென்டிலேட்டர் கருவிகள், 75 உயரழுத்த ஆக்சிஜன் செலுத்தும் கருவிகள், இரண்டு அல்ட்ராசவுண்ட் இயந்திரங்கள், கூடுதலாக ஒரு எக்ஸ்ரே கருவி போன்றவை வழங்கப்பட்டன.
இதேபோல் வென்டிலேட்டர் துணையுடன் செயல்படும் ஈ - பாப் என்ற கருவியும் வழங்கப்பட்டது. இவை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மூச்சு விடுவதற்கு வழியில்லாமல் திணறிய நோயாளிகளுக்கு உயரழுத்த ஆக்ஸிஜன் இயந்திரம் மூலம் செயற்கை சுவாசம் வழங்க முடிந்தது.
இந்தக் கருவி பயன்தராதவர்களுக்கு வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளித்து காப்பாற்றி உள்ளோம். எனவே, இந்தக் கருவிகள் மூலம் குமரி மாவட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இந்தக் கருவிகள் தொடர்ந்து செயல்பாட்டில் இருந்து வருகிறது. அதனைப் பயன்படுத்தி வருகிறோம்' இவ்வாறு அவர் கூறினார்.
கரோனா தொற்றுநோயின் பின்னணியில் அரசு மருத்துவமனைகளில் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.