கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் சமூக ஒற்றுமை கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கத்திற்கு அய்யாவழி சமய தலைவர் பாலபிரஜாபதி அடிகளார் தலைமைத் தாங்கினார். இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினர் ஆஸ்டின், பத்மநாபபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மனோ தங்கராஜ், முன்னாள் எம்எல்ஏ பழ. கருப்பையா உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த பழ. கருப்பையா கூறியதாவது, "சமீபகாலமாக மத மோதல்களை ஊக்குவிக்கும் போக்கு நடைபெற்றுவருகிறது. காஷ்மீரைப் பொறுத்தவரையில் சட்டப்பிரிவு 370 அந்த மாநிலத்தினுடைய சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிதான் நீக்க முடியும்.
ஆளுநரிடம் கையெழுத்து வாங்கி குடியரசுத் தலைவரிடம் கொடுத்திருக்கிறார்கள். அது செல்லாது உச்ச நீதிமன்றம் சென்றால் அது வெல்லாது. பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. நமது நாட்டில் செய்ய வேண்டிய காரியம் எவ்வளவு இருக்கிறது. அதை எல்லாம் விட்டுவிட்டு இந்த 370 நமக்கு தேவையா?
மேலும் மத்திய அரசிடம் நமது உரிமைகளை கேட்டுப் பெற வேண்டிய நிலைமைக்கு மாறாக தமிழ்நாடு அரசு அவர்கள் கொண்டுவரும் இல்லாத சட்டத்திற்கு எல்லாம் தலை அசைத்துக் கொண்டிருப்பது நல்லதல்ல" என்று கூறினார்.