குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பொன்னப்ப நாடார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வேதநாயகம் (65). இவர் வடசேரி பகுதியில் உள்ள தனியார் நகை அடகு நிறுவனத்தில் ஏழு லட்ச ரூபாய்க்கு நகை அடகு வைத்திருந்தார்.
இதுதொடர்ந்து கரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு பொது ஊரடங்கு அறிவித்தது. இந்த சமயத்தில் பணத்தைக் கட்டி நகையை திருப்ப சென்ற அவருக்கு அடகு நிறுவனம் செயல்படாததால் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அப்போது அந்த அலுவலர்கள் நிறுவனம் திறந்ததும் நகைகளை மீட்டு கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று அடகு நிறுவனத்திற்குச் வேதநாயகம் நகைகளை திருப்பி வாங்க சென்றுள்ளார். அப்போது அடகு நிறுவன பணியாட்கள் அதிக வட்டி கேட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அதிக வட்டி கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட வேதநாயகம் கூறுகையில்,
கரோனா பாதிப்பு காலங்களில் அதிக வட்டி வசூலிக்க கூடாது என மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. எனினும் 7 லட்ச ரூபாய்க்கு முறையாக 25 ஆயிரம்தான் வட்டி வரவேண்டும். ஆனால் என்னிடம் 59 ஆயிரம் ரூபாய் வட்டியாக கேட்கின்றனர். இவ்வாறு அரசு உத்தரவை மீறி செயல்படும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: மூன்றாம் கட்ட ஊரடங்கு... சொந்த ஊருக்கு புறப்படும் வடமாநில மக்கள்