கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கோணம்காடு பகுதியைச் சேர்ந்த 16 வயதான சிறுமி கடந்த 6ஆம் தேதி காணாமல்போன நிலையில் பெற்றோர் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகராளித்தனர்.
இந்தப் புகாரின்பேரில் சிறுமி காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்த மகளிர் காவல் துறையினர் சிறுமியை தேடிவந்தனர்.
அந்தச் சிறுமியை இளைஞர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் கடத்திச் செல்லும் காட்சிகளை சிறுமியின் பெற்றோர் குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அந்த இரு சக்கர வாகன எண்ணை வைத்து காவல் துறையினர் வாகனத்தையும் அந்த நபரையும் காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணைசெய்தனர். இதில் அந்த நபர் தூத்துக்குடியைச் சேர்ந்த ஆன்றணி என்பதும் தற்போது வீடுதோறும் டிவி சரி செய்யும் வேலை பார்த்து வருவதாகவும் தெரிவித்தார்.
பின்னர் காவல் துறையினர் அந்தச் சிறுமியை நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வைத்து மீட்டு காப்பகத்தில் பாதுகாப்பாக வைத்தனர். இந்த நிலையில் இன்று மாலை அந்தச் சிறுமியை மகளிர் காவல் நிலைய தலமை காவலரின் இருசக்கர வாகனத்தில் ஏற்றி இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
விசாரணைக்குப் பின்னர் மீண்டும் நாகர்கோவில் கொண்டுசெல்லும் வழியில் தோட்டியோடு அருகே இயற்கை உபாதை கழிப்பதாகச் சொல்லி இறங்கிய அந்தச் சிறுமி மகளிர் காவலரின் கட்டுப்பாட்டை மீறி தப்பியோடியுள்ளார். பின்னால் பின்தொடர்ந்து வந்த இருசக்கர வாகனத்தில் தப்பியோடியதாக தலைமை காவலர் தெரிவித்தார்.
இந்த நிலையில் குளச்சல் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜானகி தலைமையில் சிறுமியை காவல் துறையினர் தீவிர தேடுதல் நடத்திவருகின்றனர். போக்சோ சட்டத்தில் விசாரணை சிறுமி ஒருவர் போலீசாரால் பாதுகாப்பின்றி கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.