கன்னியாகுமரி நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரதீஷ் குமார்(35). இவர் ஆரல்வாய் மொழியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த ஓர் ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்து இவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் ரதீஷ் குமாருக்கும் மணவாளக்குறிச்சியைச் சேர்ந்த மேக்ஸன் என்பவர் மனைவி ஷீபாவிற்கும் ஏற்கெனவே திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்நிலையில் திருமணம் முடிந்த பின்னர் ரதீஷ் குமார், ஷீபாவினுடைய தொடர்பை துண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஷீபா, ரதீஷ் குமார் பணிபுரியும் மருத்துவமனைக்கு வந்து உள்ளார்.
அப்போது தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் ரதீஷ் குமாரை குத்திக்கொலை செய்துவிட்டு அந்த இடத்திலேயே இருந்து உள்ளார். இக்கொலை குறித்து தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடம் வந்த உடன் சரணடைந்து உள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இவர் மட்டும் இந்தக் கொலையை செய்தாரா அல்லது அவருடன் வேறு நபர்கள் வந்தனரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குமரி பூங்காவில் அத்துமீறும் காதல் ஜோடிகள் - கண்டுகொள்ளுமா காவல் துறை?