கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடுமையாகப் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. பொது இடங்களில் மக்கள் அதிகமாகக் கூடுவதைத் தவிர்க்க வழக்கமான காய்கறி, மீன் சந்தைகள் மூடப்பட்டுள்ளன.
மீன் உணவை அதிகமாக உட்கொள்ளும் மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் வகையிலும் மீன் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்றும் மீன் கடைகள் தற்போது திறந்தவெளியில் சில நிபந்தனைகளுடன் செயல்பட்டுவருகின்றன.
இந்நிலையில் கன்னியாகுமரி பகுதியில் உள்ள மீன் கடைகளில் அழுகிய மீன்கள் விற்கப்படுவதாக அகஸ்தீஸ்வரம் வட்டார உணவுப் பாதுகாப்புத் துறையினருக்குப் புகார்கள் வந்தன.
இப்புகாரின்பேரில் வட்டார உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் தங்கசிவம், மீன்வளத் துறை ஆய்வாளர் மரிய விபின் ஆகியோர் அகஸ்தீஸ்வரம், மாதவபுரம், கன்னியாகுமரி மீன் கடைகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.
இந்த ஆய்வில் சில வியாபாரிகள் அழுகிய மீன்களை விற்பது தெரியவந்தது. இதனையடுத்து சுமார் 20 கிலோ எடையுள்ள நெத்திலி, மத்தி மீன்களையும் சுத்தமில்லாமல் இருந்த கருவாடுகளையும் பறிமுதல்செய்த உணவுப் பாதுகாப்புத் துறையினர், பிளீச்சிங் பவுடருடன் சேர்த்து குப்பையில் கொட்டி அழித்தனர்.
மேலும் மீன் வியாபாரிகள் அரசு பிறப்பித்த நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க: இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய இரு காவலர்கள் பணியிடை நீக்கம்!