ஐதராபாத்: 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளன. ஐபிஎல் தொடரில் ஒவ்வோரு ஆண்டும் மினி ஏலமும், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மெகா ஏலமும் நடத்தப்படும். அதன்படி 2025ஆம் ஆண்டு மெகா ஏலம் நடத்தப்பட உள்ளது. இந்த முறையும் ஐபிஎல் மெகா ஏலத்தை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
ஜெட்டாவில் ஐபிஎல் ஏலம்:
2025 சீசனுக்கான ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடக்க உள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பெங்களூரு, சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பல முன்னணி நகரங்கள் உள்ள நிலையில், அதை எல்லாம் விட்டுவிட்டு சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் ஏன் ஐபிஎல் மெகா ஏலத்தை நடத்த வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
இது குறித்து ஆராயும் போது சில முக்கியத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே விளையாட்டு தொடர்கள் மீதான முதலீடுகளை சவுதி அரேபியா அதிகரித்து வருகிறது. ஏற்கனவே சவுதி அரேபியாவைச் சேர்ந்த கால்பந்து அணியான அல் நசர் கிளபுக்காக தான் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடி வருகிறார்.
ஏன் ஜெட்டாவில் ஐபிஎல் மெகா ஏலம்?:
அதேபோல் கடந்த ஆண்டு இந்தியா வந்த சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான், ஐபிஎல் தொடரில் முதலீடு செய்வதில் ஆர்வமாக இருந்ததாக தகவல் வெளியானது. ஐபிஎல் நிர்வாகத்தை ஹோல்டிங் நிறுவனமாக மாற்றி, அதன் பங்குகளை வாங்க விரும்புவதாக அவர் மத்திய அரசை அணுகியதாகவும் கூறப்பட்டது.
ஆனால் அப்போது நாடாளுமன்றத் தேர்தல் நடந்ததால் அது வெறும் பேச்சுவார்த்தையிலேயே நின்று போனதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை சவுதி அரேபியாவில் நடத்தி அதன் மூலம் அதிக முதலீடுகளை ஈர்க்க பிசிசிஐ திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
ஜெட்டாவில் எங்கு நடக்கிறது ஏலம்?:
துறைமுக நகரான ஜெட்டாவில் உள்ள அபாடி அல் ஜோஹர் அரேனாவில் ஐபிஎல் மெகா ஏலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் தங்குவதற்கு ஏதுவாக அங்குள்ள ஷங்கரி லா (Shangri-la) என்ற நட்சத்திர விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சீசனுக்கான ஐபிஎல் ஏலம் துபாயில் நடைபெற்றது. முன்னதாக ரியாத், துபாய், வியன்னா, சிங்கப்பூர் உள்ளிட்ட நகரங்களில் நடத்த 2025 ஐபிஎல் மெகா ஏலத்தை நடத்த பிசிசிஐ ஆலோசித்து வந்த நிலையில், இறுதியில் ஜெட்டா தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இந்த முறை ஏலம் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எத்தனை வீரர்கள் ஏலத்தில் பங்கேற்பு:
நவம்பர் 4ஆம் தேதியுடன் ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ள வீரர்கள் முன்பதிவு செய்வதற்கான காலக் கெடு நிறைவு பெற்ற நிலையில், அடுத்த இரு நாட்களில் எத்தனை வீரர்கள் பங்கு கொள்கின்றனர் என்ற அதிகாரப்பூர்வ பட்டியலை பிசிசிஐ வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஆயிரத்து 574 வீரர்கள் முன்பதிவு செய்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதில் 320 கேப்டு பிளேயர்களும், ஆயிரத்து 224 அன்கேப்டு வீரர்களும், 409 வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொள்ள உள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். இதுவரை 40க்கும் மேற்பட்ட வீரர்களை அணிகள் தக்கவைத்துக் கொண்ட நிலையில், மீதமுள்ள 204 இடங்களுக்கான வீரர்கள் ஏலம் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: 42 வயதில் ஐபிஎலில் அறிமுகம்! சென்னை அணியில் இணையும் மற்றொரு இங்கிலாந்து வீரர்?