கன்னியாகுமரி: சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் 350 விசைப் படகுகள் உள்ளன. அதே போன்று அதனைச் சார்ந்த கடற்கரை கிராமங்களான வாவாத்துறை, ஆரோக்கியபுரம், கோவளம், புதுகிராமம், கீழமணக்குடி, பள்ளம் உள்ளிட்ட 10 கடற்கரை கிராமங்களில் சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் கோவளம் கடற்கரை கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். கடல் சீற்றத்திலிருந்து இந்த மீனவ கிராமத்தை காப்பாற்றுவதற்காக அமைக்கப்பட்ட தூண்டில் வளைவு தற்போது ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தாலும், ராட்சத அலையால் சேதமடைந்து கடந்த மூன்று நாள்களாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை
உயிருக்கே ஆபத்து
ஆழ் கடலில் தூண்டில் வளைவின் முன் பகுதிகளிலும் சுமார் 12 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வருவதால் நாட்டுப் படகுகளை அதில் செலுத்த முடியவில்லை. அவ்வாறு செலுத்தினால் படகுகள் கவிழ்ந்து விடுவதாகவும், மீன் வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் கடலில் மூழ்கி விடுவதாகவும், உயிருக்கே ஆபத்து ஏற்படுவதாகவும் தெரிவித்து இப்பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் உள்ளனர்.
மேலும், பலமுறை இங்கு கடல் அரிப்பு தடுப்பு சுவர் அமைத்து தர கேட்டும், ஆட்சியாளர்களும் அலுவலர்களும் வந்து பார்த்துவிட்டு இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் கோவளம் பகுதி மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: யோகா பயிற்சி செய்து உலகச் சாதனை படைத்த 10 வயது சிறுமி!