கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவருக்கு உயர் அலுவலர் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், உயர் மருத்துவ அலுவலரான மருத்துவர் ஒருவர் தொடர்ந்து இவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான பெண் மருத்துவர், சம்பந்தப்பட்ட நபர் மீது காவல் நிலையத்திலும், துறை அலுவலர்களிடமும் பலமுறை புகாரளித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பெண்கள் ஆணையம், மனித உரிமை ஆணையம், பிரதமர் என உயர்மட்ட அளவிலும் புகார்களை அனுப்பியுள்ளார். இருப்பினும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், பாலியல் ரீதியாக தொந்தரவுக்குள்ளான பெண் மருத்துவர் இன்று (அக்.,21) திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது தன்னை உயர் அலுவலர் உள்ளிட்ட சில ஊழியர்கள் பணி செய்ய விடாமல் இடையூறு செய்து தாக்க முற்பட்டதாக கூறிய அவர், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஆரம்ப சுகாதார மையத்தின் வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த அறப்போராட்டத்தை சுகாதாரத்துறை அலுவலர்களும், காவல் துறையினரும் கண்டுகொள்ளாத நிலையில், தனக்கு நியாயம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பெண் மருத்துவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:சன் பிக்சர்ஸ் பெயரில் துணை நடிகைக்கு பாலியல் தொல்லை: சைபர் க்ரைம் விசாரணை!