கன்னியாகுமரி: தமிழகத்தில் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் தஞ்சைக்கு அடுத்தபடியாக விவசாயத்தில் முக்கிய இடத்தில் உள்ள மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம். அதிலும் நாஞ்சில் நாடு என்ற புகழ்பெற்ற இந்த பகுதிகள் தோவாளை, அகஸ்தீஸ்வரம் ஆகிய இரு தாலுகாக்களை அடங்கியுள்ளது.
நெல், தென்னை, வாழை, மரவள்ளிக்கிழங்கும் அதிகளவு சாகுபடி செய்யப்படும் இந்த மாவட்டத்தின் விவசாயத்திற்கு ஆதாரமாக பழைய ஆறு மிக முக்கிய பங்கு வைக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள சுருளோடு பகுதியிலிருந்து மணக்குடி பகுதியில் கடலில் வந்து சேரும் இந்த பழைய ஆறு கிட்டத்தட்ட 34 கிலோமீட்டர் தூரம் பல கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளுக்குள் நுழைந்து கடலில் சென்று சேருகிறது.
இந்த ஆற்றின் தண்ணீரை நம்பி தான் விவசாயிகளும் பொதுமக்களும் பயன்பெற்று வருகிறார்கள். மிக பழைய வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த ஆறு, அண்மைக்காலங்களாக பலருடைய ஆக்கிரமிப்பு காரணமாக சுருங்கி பல இடங்களில் சிறு கால்வாய் போல மாறி உள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட முக்கிய அணைகளில் இருந்து விவசாயத்திற்கு திறந்து விடப்படுகின்ற தண்ணீர் கூட முழுமையாக வந்து சேர முடியாத ஒரு நிலை ஏற்பட்டு உள்ளது.
இதனை விவசாயிகளும், இந்த ஆற்றின் நீரை பயன்படுத்தும் பொதுமக்களும் அரசுக்கும், பொதுப்பணி துறையினருக்கும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுகின்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திலும் பலமுறை சொல்லியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்து வந்தது. நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு பின்னர் அரசு தரப்பில் இதனை விரிவுபடுத்தலாம், ஆக்கிரமிப்புகள் எடுக்கலாம் என்ற திட்டத்தை கொண்டு வந்து அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகளிடம் இந்த பணிகள் ஒப்படைக்கப்பட்டன.
இதன் முதல் கட்டமாக நாகர்கோவில் அடுத்துள்ள வீரநாராயணமங்களம் முதல் ஆண்டித்தோப்பு பகுதி வரை உள்ள மூன்றரை கிலோமீட்டர் தூரம் ஆற்றில் கரை ஓரங்களில் ஆக்கிரமித்து நடப்பட்டுள்ள மரம், செடி மற்றும் புதர்களை அகற்றும் பணிகளை செய்ய இப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பொதுப்பணித்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது.
ஆர்வத்தோடு இறங்கிய விவசாயிகள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே இந்த பணிகளை செய்ய முடிந்தது. அதற்குள் ஆதாயம் பெறும் நோக்கில் பணியில் ஈடுபட்ட விவசாயிகளிடம் ஆளுங்கட்சி நிர்வாகிகள் கப்பம் கேட்டு மிரட்டல் விடுத்து உள்ளனர். இதனால் இந்த திட்டம் தற்போது பாதியில் முடங்கி உள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் நேரில் சந்தித்து மனுக்கள் அளித்த பின்பும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேலையை நிறுத்தி வைத்து உள்ளனர் என விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து சமுக ஆர்வலர் ஜான் விக்டர் தாஸ் கூறும்போது, “வரலாறு சிறப்புமிக்க இந்த ஆற்றை ஆக்கிரமித்து வைத்திருக்கும் ஆக்கிரமிப்பாளர்களின் தூண்டுதலின் பெயரில் தான் இந்த திட்டத்தை நிறுத்தி வைத்து உள்ளனர். ஆகையால் உடனடியாக ஆட்சியாளர்கள் இந்த திட்டத்தை தொடர்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களிடம் இருக்கும் அனைத்து இடங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும். உடனடியாக இதை செய்யாவிட்டால் இந்த பகுதியில் உள்ள மக்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட்ட திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்தார்.