ஃபானி புயல் காரணமாக குமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், ஏப்ரல் 29ஆம் தேதி மதியம் வரை கடும் வெயில் அடித்த நிலையில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மேகமூட்டத்துடன் மழை பெய்வதற்கான அறிகுறியுடன் தட்பவெப்பம் நிலவியது.
ஃபானி புயல் அச்சத்தால் மீனவ கிராம மக்கள் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்திருப்பதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
![ஃபானி புயல் எச்சரிக்கை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/img-20190429-wa00091556537939863-37_2904email_1556537951_794.jpg)
இதேபோல் கன்னியாகுமரி ஆரோக்கியபுரத்தில் இருந்து நீரோடி வரையிலான கடற்கரை கிராமங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மேலும் முட்டம், குளச்சல், தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலும் 1000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தங்கு தளத்திலே நிறுத்தப்பட்டிருந்தன.
15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் இன்று பாதுகாப்புக் கருதி கடலுக்குச் செல்லாமல் கரையோரம் நிறுத்தப்பட்டிருந்தன. எனவே, குமரி மீனவர்கள் ஏப்ரல் 30ஆம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறையினர் எச்சரித்துள்ளனர்.