முன்னாள் அமைச்சரும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான பா. வளர்மதி கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ”பத்திரிகை சுய விளம்பரத்திற்காக ஸ்டாலின் டீக்கடையில் சென்று டீ குடிப்பது, ஷூ போட்டுக்கிட்டு ஏர் ஓட்டுவது எனத் தேர்தலுக்குத் தேர்தல் பல ஸ்டண்ட் செய்கிறார்” எனக் கிண்டல் செய்துள்ளார்.
இந்தியாவின் பல மாநிலங்களில் புராதன சின்னங்கள் இருந்தால்கூட மகாபலிபுரத்தின் சிறப்பை படித்து தெரிந்து கொண்டிருப்பதால் சீன அதிபர் மகாபலிபுரத்தை தேர்ந்தெடுத்துள்ளார் என்றும் மகாபலிபுரத்திற்கும் சீனாவிற்கும் ஒரு உறவு இருக்கிறது என்று தெரிந்துதான் பேச்சுவார்த்தை நடத்த சீன அதிபர் வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "நாங்குநேரி இடைத்தேர்தலில் உள்ளூரைச் சேர்ந்த ரெட்டியார்பட்டி நாராயணனுக்குதான் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. சான்றிதழ்கள், கையெழுத்து வாங்க உள்ளூர் வேட்பாளரை எப்போது வேண்டுமானாலும் சந்தித்து பயன்பெறலாம் ஆனால் வெளியூர் வேட்பாளரை சென்னைக்கு சென்றுதான் பார்க்க வேண்டும். வருகிற 13ஆம் தேதி முதல் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் நாங்குநேரியில் பரப்புரையில் ஈடுபடவுள்ளனர்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: ‘திமுக ரவுடிசம் எங்கள் கட்சியில் இல்லை’ - அதிமுக வேட்பாளர் குற்றச்சாட்டு