கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அடுத்த அனந்தன் பாலம் அருகே காந்திநகர் காலனியைச் சேர்ந்தவர் வினோத் (23). கார் ஓட்டுநரான இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஜெனிஸ்டன் (25) என்பவரும் நண்பர்கள். நேற்றிரவு இவர்கள் வீட்டின் பக்கத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வினோத் நண்பனை கத்தியால் குத்தியுள்ளார்.
இதில் காயமடைந்த ஜெனிஸ்டனின் சத்தம் கேட்டு அங்கு வந்த அவரது சகோதரர் வினிஸ்டன், நின்று கொண்டிருந்த வினோத்தை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த வினோத் மற்றும் ஜெனிஸ்டன் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி வினோத் பரிதாபமாக இறந்தார்.
ஜெனிஸ்டனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக ஜெனிஸ்டனின் சகோதரரான பொறியியல் கல்லூரி மாணவர் வினிஸ்டனை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட வினிஸ்டன் அளித்துள்ள வாக்குமூலத்தில், “எனது சகோதரரான ஜெனிஸ்டனும் வினோத்தும் நண்பர்கள். சம்பவத்தன்று இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது எனது சகோதரரை வினோத் கத்தியால் குத்தினார். அந்த சத்தம் கேட்டு நான் அங்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த எனது சகோதரரைக் காப்பாற்ற முயன்றேன். அப்போது என்னையும் வினோத் தாக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த நான் அவரை கத்தியால் சரமாரியாகக் குத்தினேன்” என்று கூறினார்.
இதையும் படிங்க: யூ-டியூப் பார்த்து குக்கரில் கள்ளச்சாராயம் காய்ச்ச முயற்சி: மாமனார், மருமகன் கைது!