கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தாமொழியை அடுத்த மேலமாவிளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ தங்கம். இவருக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இவரது இரண்டாவது பெண் பிள்ளை விமலாவுக்கும் தர்மபுரத்தைச் சேர்ந்த ராஜன் என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்நிலையில் திருமணமான நாள் தொடங்கி, கடந்த 13 ஆண்டுகளாக ராஜன் வரதட்சணைக் கேட்டு விமலாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், இது தொடர்பாக கேட்கச் சென்ற அவரது தாய் ராஜதங்கத்தை வயதானவர் என்று கூட பாராமல் ராஜன் தாக்கி, விரட்டியுள்ளார். பலமுறை விமலாவை வரதட்சணைக் கேட்டு அடித்து, துன்புறுத்தி கொலை செய்யவும் அவர் முயற்சித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விமாலவை கடுமையாகத் தாக்கி அவரது பெற்றோரிடமிருந்து வரதட்சணை வாங்கி வருமாறு வற்புறுத்தி, வீட்டை விட்டு ராஜன் விரட்டியுள்ளார். அதனைத் தொடர்ந்து, காயங்களுடன் நள்ளிரவு 12 மணியளவில் தாய் ராஜ தங்கம் வீட்டிற்கு விமலா சென்றுள்ளார்.
ரத்தக் காயங்களுடன் விமலாவைக் கண்ட அவரது தாய் பதறி, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தனது மகளை கடந்த 13 ஆண்டுகளாகத் தொடர்ந்து வரதட்சணைக் கொடுமை செய்து வரும் அவரது கணவரைக் கைது செய்து, தகுந்த தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் அவரது தாய் ராஜதங்கம் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: மனைவியின் தலையை வெட்டியெடுத்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற கணவன்!