கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் பெய்த கனமழை காரணமாக, தக்கலை அருகே உள்ள உதயகிரி கோட்டையில் தண்ணீர் புகுந்தது. இதனால், அங்குள்ள பல்லுயிர் பூங்காவில் மான்கள் நிற்கக் கூடிய இடம் மற்றும் குழந்தைகள் விளையாடும் பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே, புலியூர் குறிச்சி பகுதியில் உதயகிரிகோட்டை அமைந்துள்ளது. இந்த கோட்டையானது கி.பி.1600ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. தமிழக அரசின் வனத்துறை கட்டுபாட்டில் உள்ள கோட்டையில், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக பல்வேறு வளர்ச்சிப் பணிகள், ஏராளமான அம்சங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டு பல்லுயிரினப் பூங்காவாக மாற்றப்பட்டது.
இவ்வாறு பல்லுயிர் பூங்காவாக மாற்றப்பட்ட உதயகிரி கோட்டையில் அரியவகை புள்ளி மான், மயில், மீன் அருங்காட்சியகம் உள்ளன. இப்பகுதியில் குழந்தைகளுக்கான பொழுது போக்கிற்கு பல வசதிகள் உள்ளதால் குமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தவறாமல் உதயகிரி கோட்டை பல்லுயிர் பூங்காவிற்கு வருகை புரிகின்றனர். மேலும், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர்வாசிகளும் விடுமுறை நாட்களில் குழந்தைகளுடன் அதிகளவில் செல்கின்றனர்.
இந்நிலையில், அப்பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக, அங்குள்ள குளத்தில் நீர் நிரம்பியது. இதனால் மான்கள் நிற்கக் கூடிய இடத்தில் நீர் சூழ்ந்துள்ளதால், மான்கள் நிற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில், சுமார் 50க்கும் மேற்பட்ட மான்கள் உள்ளன. மழையால் இந்த மான்கள் உறவிடம் தேடி அலைந்து வருகின்றன. மேலும், இங்குள்ள குழந்தைகள் விளையாடும் மைதானத்தில் மழை நீர் சூழ்ந்ததால் குளம் போன்று காட்சியளிக்கிறது.
நீர் தேக்கத்தினால் உதயகிரி கோட்டை முழுவதும் சுற்றிப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். எனவே, உடனடியாக உதயகிரி கோட்டை பகுதியில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை மாற்ற நடவடிக்கை எடுப்பதுடன், நிரந்தரமாக அந்தப் பகுதியில் தண்ணீர் தேங்காத வண்ணம் வடிகால்களை அமைத்து சீரமைக்க வேண்டும் என்பது சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது
மேலும், மழை நேரத்தில் மான்கள் ஒதுங்கக்கூட இடம் இல்லாத நிலை உள்ளதால், அங்கு ஒரு கூடாரம் அமைத்து தர வேண்டும் என தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தென்காசியில் அதிரகரிக்கும் ப்ளு காய்ச்சல் தொற்று.. 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி!