மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் தொடர்ந்து போராட்டங்கள், வன்முறைகள் வெடித்துள்ளன.
இந்நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை எதிர்த்தும், இதனைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அந்த மசோதாவை திருப்பப் பெற வலியுறுத்தியும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நாகர்கோவிலில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் ராஜன், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
அதேபோல் ராமநாதபுரத்தில் திமுக மாவட்டச் செயலாளர் காதர் பாட்ஷா தலைமையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த சட்டத்திருத்தம் சிறுபான்மையினர் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு எதிரானது. எனவே, மத்திய அரசு இந்த திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்று முழங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திமுக தொடண்டர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டவர்களைக் காவல் துறையினர் கைது செய்து பின் விடுதலை செய்தனர்.