கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கோ-ஆப்டெக்ஸில் இந்த ஆண்டுக்கான தீபாவளி விற்பனையை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநரே இன்று (அக்டோபர் 16) தொடக்கி வைத்தார். இதை கருங்கல் வட்டார கல்வி அலுவலர் சந்திரமதி பெற்றுக்கொண்டார். விற்பனை இலக்கு ரூ.3.75 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர் பிரசாந்த் வடநரே, "குமரி மாவட்டத்தில் உள்ள மூன்று கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களின் மூலம் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தில் 30 விழுக்காடு தள்ளுபடி விலையுடன் ரூ.3.40 கோடி அளவிற்கு விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.3.75 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குமரி கோ-ஆப்டெக்ஸில் தற்போது வழங்கப்பட்டு வரும் 30 விழுக்காடு சலுகையானது பொங்கல் பண்டிகை வரை வழங்கப்படும். இதை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக புதிய ரகங்களாக மதுரை காட்டன் சேலைகள், காதி சேலைகள் , காதி பெட்சீட் ரகங்கள், சம்பரே பெட்சீட் ரகங்கள் மற்றும் பாலிவிஸ்கோஸ் ஷூட்டிங் ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
மேலும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் சேமிப்பு திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தில் சேர்ந்து வாடிக்கையாளர்கள் 56 விழுக்காடு கூடுதல் பயனுடன் கைத்தறி துணிகள் வாங்கி பயன் அடையலாம்” எனத் தெரிவித்தார்.