கன்னியாகுமரி அருகே நரிக்குளம் பகுதியில் பல ஏக்கரில் வாழைகள் பயிரிடப்பட்டிருந்தன. இந்நிலையில், நேற்று (மே 18) மாலை வீசிய சூறைக்காற்று காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனை இன்று கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி., வசந்தகுமார் விவசாயிகளுடன் சென்று பார்வையிட்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் கரோனா தடை உத்தரவு காரணமாக விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். இந்நிலையில், நேற்று வீசிய புயல் காற்றால் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான குலை தள்ளிய வாழை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.
எனவே, தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். இதற்கு முன்பும் ஒருமுறை இதேபோன்று வாழை மரங்கள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் அது இன்னும் வழங்கப்படவில்லை. எனவே இந்த முறை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
இதையும் படிங்க: கரோனா... கூடவே சூறைக்காற்று: பாதிக்கப்படும் விவசாயிகள்