கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு தகுந்த இடைவெளியுடன் இயல்பு வாழ்க்கை திரும்பிவருகிறது. இந்நிலையில் வெளியூர்களில் இருந்து அதிகமானோர் வருவதால் கரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இதைத்தொடர்ந்து காய்கறி சந்தை, மீன்சந்தை போன்றவற்றில் உள்ள வியாபாரிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில் குமரி-கேரள எல்லையில் உள்ள களியக்காவிளை சந்தையில் காய்கறி கடைகள், இறைச்சிக் கடைகள், மீன் கடைகள் போன்றவற்றில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு சுகாதாரத் துறையினர் சளி, ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பினர்.
இதேபோல் நாகர்கோவில் வடசேரி பேரூந்து நிலையத்தில் செயல்படும் காய்கறி சந்தையில் உள்ள வியாபாரிகளின் சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், குமரி மாவட்டத்தில் திங்கள்நகர், குளச்சல், கருங்கல், தக்கலை, குலசேகரம், ஆரல்வாய்மொழி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள சந்தைகளிலும் கரோனா பரிசோதனை அடுத்தக்கட்டமாக நடத்தப்படவுள்ளது.
சென்னையில் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து கரோனா பரவியதுபோல் குமரியில் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.