கன்னியாகுமரி: குளச்சல் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் கீதா, பொதுப்பணி மேற்பார்வையாளர் பிரம்ம சக்தி, ஊழியர்கள் அண்ணா சிலை சந்திப்பில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே சென்ற இருசக்கர வாகனம், ஆட்டோ, அரசுப் பேருந்து, கார்களை நிறுத்தி முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
அப்போது திங்கள் நகர் பகுதியிலிருந்து குளச்சல் நோக்கி வந்த ஒரு காரில் இருப்பவர்கள் முகக்கவசம் அணியாததைக் கண்டு, நகராட்சி ஊழியர்கள் காரை நிறுத்தினர். பின்னர் காரில் பயணித்தவர்கள் கன்னியாகுமரி நாடாளுமன்ற பாஜக தேர்தல் பார்வையாளர் ராஜகண்ணன், கோட்டமைப்புச் செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் என்பதை அறிந்தனர். காரில் இருந்த நால்வரில் இருவர் முகக்கவசம் அணியாததால், அவர்களிடம் நகராட்சி ஊழியர்கள் அபராதம் செலுத்துமாறு கூறினர்.
அதற்குக் காரில் இருந்தவர்கள் 'காருக்குள்தானே இருக்கிறோம், அதற்கு அபராதம் செலுத்த வேண்டுமா?' எனக் கேட்டனர். இது தொடர்பாக அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் அவர்களைச் சமாதானப்படுத்தினர்.
தொடர்ந்து கார் புறப்படத் தயாரானதும் நகராட்சி ஊழியர் ஒருவர் கார் கதவைத் திறந்து அபராதம் செலுத்திவிட்டுச் செல்லுமாறு கூறினார்.
அப்போது ராஜகண்ணன் நிலைதடுமாறி கீழே விழப்போனார். உடனே அவருக்கு அருகிலிருந்த பாஜக நிர்வாகி அவரை காருக்குள் இழுத்து மீட்டார். இந்தச் சம்பவத்தால் நகராட்சி ஊழியர்களுக்கும் பாஜக நிர்வாகிகளுக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் சிலர் நகராட்சி ஊழியர்களுக்கு ஆதரவாக அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த பாஜக உள்ளூர் நிர்வாகிகள் அங்கு விரைந்துசென்று நகராட்சி ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் அங்கு இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் புகார் அளிக்க காவல் நிலையம் சென்றனர்.
அதற்குள் தகவலறிந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பி. சாஸ்திரி குளச்சல் காவல் நிலையம் வந்தார். இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தி இருதரப்பினரும் சமாதானமாகச் செல்லுமாறு கூறி வழக்குப்பதிவு செய்யவிடாமல் தடுத்தார்.
இச்சம்பவம் அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்களிடையேயும் பேசுபொருளாகி வருகிறது.