கன்னியாகுமரி: குளச்சல் அருகே சரல்விளை பகுதியைச்சேர்ந்த தொழிலதிபர் சேகர். இவர் நேற்று (ஜூன் 18) மாலை அவரது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் தம்பியுடன் வெளியே சென்றுள்ளார்.
அப்போது வீட்டிற்கு அருகே போதையில் நின்றுகொண்டிருந்த 4 பேர் கொண்ட ரவுடி கும்பல் சேகரை வழிமறித்து, குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு சேகர் மறுக்கவே, அந்த கும்பல் அவரை விரட்டி உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர்.
அதனோடு விடாத அக்கும்பல், வீட்டில் அத்துமீறி நுழைந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை உருட்டுக்கட்டைகளால் அடித்து துவம்சம் செய்துள்ளனர். மேலும், வீட்டுச்சுற்று சுவர்களில் வைக்கப்பட்டிருந்த அலங்கார விளக்குகளையும் அடித்து நொறுக்கி உள்ளனர். இதனையடுத்து போதை ரவுடி கும்பலால் காயமடைந்த சேகர் சிகிச்சைக்காக குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் இது குறித்து சிசிடிவி காட்சிகளுடன் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்ட அந்த ரவுடி கும்பல் பெத்தேல்புரம் பகுதியைச்சேர்ந்த இன்பராஜ், அஜித்ராம், ஸ்டாலின், பிரதீப் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த ரவுடி கும்பலைச்சேர்ந்த 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த குளச்சல் போலீசார் தலைமறைவாக இருக்கும் அவர்களை வலைவீசித்தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த ரவுடி கும்பல் உருட்டு கட்டையுடன் தொழிலதிபர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சொகுசு காரையும் அலங்கார விளக்குகளையும் தாறுமாறாக அடித்து நொறுக்கும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: ஆட்டோவில் வைத்து குட்கா விநியோகம்: 2 பேர் கைது